மனித மனம் விசித்திரமானது . . .
-oOo-
பரிணாம வளர்ச்சியில் நாம் கடந்து வந்த நிலையை நோக்கி ஒரு சிறு விருப்பம், ஏக்கம் இருந்து கொண்டு இருக்கும்.
உதாரணமாக சென்னையில் பிறந்த வளர்ந்த குழந்தைகள் எங்காவது மாட்டு வண்டியையோ, குதிரை வண்டியையோ பார்த்தால் அதில் செல்லவேண்டும் என்று விரும்புவார்கள் அல்லது அடம் பிடிப்பார்கள். ஆனால் அது ஒரு நாள் மட்டுமே.
சென்னைக்கு திரும்பிய பிறகு தினமும் பள்ளிக்கு குதிரை வண்டியில் செல்லவேண்டுமா அல்லது சீருந்தில் செல்லவேண்டுமா என்று கேட்டால் அனைவரும் சீருந்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்
-oOo-
மனிதன் செய்த முதல் தொழில் வேட்டை. அதன் பிறகு சேகரித்தல். இதைத்தான்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம் கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
என்று கூறினார்கள்
அதன் பிறகு செய்த தொழில் ஆடு மாடு மேய்த்தல். அதன் பிறகு விவசாயம். விவசாயம் வந்த காலத்தில் அது வேட்டை, சேகரித்தல், மேய்த்தல் ஆகியவற்றை விட சிறந்தது என்பதால் தான்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
என்றார்கள்
அதாவது வேட்டையாடுவதை விட விவசாயம் செய்வது எளிது.
வேட்டையாட தேவைப்படும் உழைப்பு, திறனை விட விவசாயத்திற்கு தேவைப்படும் உழைப்பும் திறனும் குறைவு
வேட்டையாடுவதில் கிடைக்கும் பலனை விட விவசாயத்தில் கிடைக்கும் பலன் அதிகம்
எனவே வேட்டையாடுபவர்களில் பெரும்பாண்மையானவர்கள் விவசாயத்திற்கு மாறிவிட்டார்கள். சிலர் மட்டும் வேட்டையில் தொடர்ந்தார்கள்
விவசாயத்திற்கு அடுத்த வளர்ச்சி தனிநபர் தொழில் பொருட்களை செய்வது. அதன் பிறகு தனிநபர் சேவைகளை அளித்தல் என்று மாறியது.
தொழிற்புரட்சி வந்த பிறகு தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
விவசாயத்திற்கு தேவைப்படும் உழைப்பை விட தொழிற்சாலைகளில் வேலை செய்வதில் இருக்கும் உழைப்பு குறைவு
விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை விட தொழிற்சாலைகளில் கிடைக்கும் வருமானம் அதிகம் என்பதால் பெரும்பாண்மையானவர்கள் தொழிற்சாலைக்கு மாறிவிட்டார்கள்
விவசாயத்தை விட மில் வேலையை பலரும் விரும்பினார்கள். சிலர் மட்டும் விவசாயத்தில் தொடர்ந்தார்கள்
இதற்கு அடுத்து சேவைத்துறைகள் வந்தன. அதில் தொழிற்சாலையை விட உழைப்பு குறைவு, தொழிற்சாலையை விட ஊதியம் அதிகம். எனவே தொழிற்சாலையில் இருந்து பலரும் இங்கு மாறினார்கள். மில்லில் வேலை செய்வதை விட ஆட்டோ ஓட்டுவதோ, சீருந்தில் நடத்துனராக இருப்பதோ சிறப்பாக தோன்றியது
சேவைத்துறையின் அடுத்த பரிணாமம் அதிகம் படிப்பு தேவைப்படும், குறைந்த உடலுழைப்பு உள்ள வங்கி வேலை, ஆசிரியர் வேலை போன்றவை
இதன் அடுத்த பரிணாமம் மருத்துவர், பொறியாளர், வக்கீல், ஐ.ஏ.எஸ் போன்றவை
தாத்தா விவசாயி, அப்பா ஆசிரியர், மகன் மருத்துவர்
தாத்தா தச்சு தொழிலாளி, அப்பா பேரூந்து ஓட்டுனர், மகன் ஐ.ஏ.எஸ் என்று மாறியது இப்படித்தான்
இதில் எந்த பேரூந்து ஓட்டுனரும் தனது மகனை விவசாயம் பார்க்க சொல்லியதில்லை. எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மகனை பேரூந்து ஓட்டுனராக்கியதில்லை (ஆனால் விமானி ஆக்குவார் )
காரணம் நாம் எப்பொழுதும்
குறைந்த ஊதியத்தில் இருந்து அதிக ஊதியம் கிடைக்கும் வேலையை விரும்புவோம்
அதிக உடல் உழைப்பில் இருந்து குறைந்த உடல் உழைப்பு தேவைப்படும் வேலையை விரும்புவோம்
இது தான் இயல்பு,
இது தான் நிதர்சணம்
இது தான் மனித வரலாறு
-oOo-
கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை விவசாயம் மட்டுமே பிரதானமாக இருந்த போது, விவசாயம் மட்டுமே பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கும் போது, அதிகம் நபர்கள் இருக்கும் பகுதியில் நிறைய பொருட்கள் விளையும்.எனவே அந்த பகுதி செல்வச்செழிப்பாக இருக்கும். இதனால் தான் இந்தியா முன்னால் இருந்தது
ஆனால்
அதன் பிறகு ஐரோப்பாவில் நடந்த மறுமலர்ச்சியும் அறிவியல் வேகமாக வளர்ந்து அவர்கள் கருவிகளை கண்டு பிடித்து தொழிற்சாலைகளுக்கு மாறியபோது அவர்களால் நிறைய பணம் சம்பாதிக்க முடிந்தது. எனவே அந்த நாடுகள் பணக்கார நாடுகள் ஆயின
இருபதாம் நூற்றாண்டில் இதற்கு ஒரு படி முன்னால் சென்ற அமெரிக்கா சேவைத்துறையில் முன்னேறியதால் அவர்கள் பணம் பெற்றார்கள்
-oOo-
புகைப்படம் எடுப்பது எப்படி எல்லாம் மாறியுள்ளது என்று பாருங்களேன்
முதலில் ப்ளேட்
அதன் பிறகு பிலிம்
அதன் பிறகு வன்ணப்படம்
அதன் பிறகு டிஜிட்டல் காமெரா
அதன் பிறகு அலைபேசியிலெயே எடுக்கலாம்
அதன் பிறகு இண்ஸ்டாகிராம் பில்டர்கள்
இதில் ஒவ்வொரு அடியும், முந்தையதை விட வேலையை எளிதாக்குபவையே
ஆனால்
மனித மனம் விசித்திரமானது . . .
என்னதான் கலர் படம் என்றாலும் ப்ளாக் அண்ட் வையிட்டில் இருக்கும் கிளாரிட்டி இருக்காது என்று சொன்னார்கள்
என்னதான் டிஜிட்டல் என்றாலும் பிலிமில் இருக்கும் கிளாரிட்டி இருக்காது என்று சொன்னார்கள்
ஆனால்
இன்று திருமண வீடுகளில் யாரும் கருப்பு வெள்ளை படமோ அல்லது பிலிம் வைத்தோ எடுப்பதில்லையே
-oOo-
பரிணாம வளர்ச்சியில் நாம் கடந்து வந்த நிலையை நோக்கி ஒரு சிறு விருப்பம், ஏக்கம் இருந்து கொண்டு இருக்கும். அந்த விருப்பத்தை, ஏக்கத்தை பயன்படுத்தி உங்களை மொட்டையடிக்கும் ஒரு கும்பல் இந்த விருப்பம், ஏக்கம் குறித்து மிகைப்படுத்தியே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்.
மென்பொருள் வேலையை விட்டு விட்டு விவசாயம் செய்யப்போகிறேன் என்று கிளம்புப்வர்கள் இது போன்ற மோசடி கும்பலால் ஏமாற்றப்படும் மூடர்களே
-oOo-
மனித மனம் விசித்திரமானது . .
அம்மியில் அரைத்தவர்களுக்கு நீங்கள் மிக்சி கொடுத்தால் அவர்கள் திரும்ப அம்மிக்கு செல்லமாட்டாரகள்
ஆனால் அம்மியில் அரைக்கும் அனுபவம் இல்லாத கும்பலில் இருக்கும் மூடர் கூட்டம் தான் அம்மி சிற்ந்தது என்று பேசும்
மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தவர் கார் வாங்கிய பிறகு திரும்ப மாட்டுவண்டியில் செல்ல மாட்டார். மாட்டுவண்டியில் சென்றிருக்காத ஒருவர் அதை விரும்புவார்.
விவசாயக்கூலியாக இருந்து அத்துடன் படித்து மென்பொருள் வேலையில் இருக்கும் யாராவது வேலையை விட்டு விட்டு விவசாயம் செய்ய கிளம்பி பார்த்துள்ளீர்களா ? அவர்களுக்கு அந்த கஷ்டம் தெரியும். போக மாட்டார்கள். ஆனால் நகரங்களில் இருந்து விவசாயத்தை நூல்களிலும் திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்த கும்பல் தான் விவசாயம் என்று கிளம்பும்.
வாழைத்தோட்டத்தில் வேலை செய்த மாரி செல்வராஜ்கள் வாழைத்தோட்டத்திற்கு செல்ல விரும்ப மாட்டார்கள். அவர்களின் பேரன்கள்தான் ஐடி வேலையை விட்டு விட்டு விவசாயம் என்று கிளம்புவார்கள்
-oOo-
இப்பொழுது அமெரிக்காவில் நடந்து கொண்டிருப்பதும் இது தான்
டிரம்போ அவருக்கு ஆதரவு ஆலோசனை கொடுத்துக்கொண்டிருக்கும் மஸ்கோ அல்லது அது போன்ற நபர்களோ இதுவரை ஒரு நாள் கூட நிலக்கரி சுரங்கத்திலோ, சாயப்பட்டறையிலோ, ஸ்பின்னிங் மில்லிலோ வேலை செய்ததில்லை. எனவே தான் இவர்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை ரொமாண்டிசைஸ் செய்கிறார்கள்
தொழிற்சாலைகள் அமெரிக்காவில் இல்லாது இந்தியாவில் இருப்பதால் இருக்கும் பாதங்களை மட்டுமே இவர்கள் பார்க்கிறார்கள்.
சிறுவயதில் இருந்தே பணத்துடன் வாழ்ந்ததால் இவர்களது Privileged பார்வை மிகவும் குறுகலாக மாறிவிட்டது
இவர்கள் ஒரு பிரச்சனையை ஒரே கோணத்தில் இருந்து மட்டும் பார்த்து தவறான முடிவை எடுக்கிறார்கள்
எப்படி தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் தடுப்பூசியினால் ஏற்படும் சாதகங்களை பார்க்காமல் மூடத்தனமாக பேசுவார்களோ இவர்களும் அதே போல் தான் செய்கிறார்கள்
அம்மிக்கு திரும்புவோம், விறகடுப்பிற்கு திரும்புவோம், விவசாயத்திற்கு திரும்வோம், கான்கிரீட் வீடு வேண்டாம், பாலம் கட்டினால் சுனாமி வரும் என்று கூறும் நம்மூர் மூடர் கூட்டத்தின் அமெரிக்க பதிப்பு தான் மீண்டும் தொழிற்சாலைக்கு செல்வோம் என்ற டிரம்பின் திட்டம்.
-oOo-
பரிணாம வளர்ச்சியில் நாம் கடந்து வந்த நிலையை நோக்கி ஒரு சிறு விருப்பம், ஏக்கம் இருந்து கொண்டு இருக்கும். அந்த விருப்பத்தை, ஏக்கத்தை பயன்படுத்தி உங்களை மொட்டையடிக்கும் ஒரு கும்பல் இந்த விருப்பம், ஏக்கம் குறித்து மிகைப்படுத்தியே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்
அந்த பிரச்சாரத்திற்கும் அமெரிக்க மக்கள் சிக்கியுள்ளார்கள். இதில் இருந்து வெளிவர அவர்கள் கொடுக்கும் விலை மிகவும் அதிகமாக இருக்கும்
மேலும் அறிந்து கொள்ள இந்த கதையை கேட்கவும்