-oOo-
முன்கதை வாசிக்க
- * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் – ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்
- * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் – மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க
- * 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் – நீங்க தான் சார் முன்னூதாரனம்
நான் : நீங்க ஏன் குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல
க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம் தாங்காது. (குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிக மிக சிறிய அறுவை சிகிச்சை)
நான் : அப்படில்லாம் இல்ல. அது சின்ன ஆபரேசன் தான். இங்கேயே பண்ணிக்கலாம். சாயங்காலமே விட்டிற்கு போயிரலாம்.
க.நா.2 : என் சம்சாரம் வேணாம்னு சொல்றா
நான் : சரி நீங்க பண்ணிக்கிட்டா என்ன ??
வ.வி.க : நான் கூட சார்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன், சார் பண்ணிக்கிட்டா இந்த சுத்துப்பட்டில எல்லாரும் பண்ணிக்குவாங்க. இப்ப நிறைய ஆம்பிளைக குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறது இல்லை.
க.நா.2 : ஆம்பிளங்க எப்படி சார் ஆப்பரேசன் பண்ண முடியும். அது பொம்பளங்க பண்ணுரது தானே
நான் : இல்ல சார். ஆம்பிளங்களும் பண்ணலாம். பொம்பளங்களும் பண்ணலாம். பொம்பளங்க உடம்பு வீக்காயிருந்தா ஆம்பளங்கதான் பண்ணனும்.
க.நா.2 : ??
நான் : நீங்க எவ்வளவு தெம்பானவரு. நீங்க பண்ணுனா தான் நல்லது. வர 20ஆம் தேதி (பல வருடங்கள் ஆகி விட்டதால் என்ன தேதி கூறினேன் என்று ஞாபகம் இல்லை) ஏரல்ல (ஏரல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்) முகாம் இருக்கு. அன்னைக்கு வந்துருங்க
க.நா.2 : சார் என் உடம்பு அதுக்கெல்லாம் சரி வருமா.
நான் : என்ன சார் நீங்க. இந்த ஏரியாவிலேயே உங்கள மாதிரி தெம்பானவங்க யாரு சரி வாங்க பாத்துரலாம்
என்று கூறியபடியே
இரத்த அழுத்தம், இதய துடிப்பு எல்லாம் பார்த்து விட்டு , அப்படியே மருந்தகம் அழைத்து சென்று உடல் எடை பார்த்து அவரை கையோடு பின்னால் ஆய்வுக்கூடம் அழைத்து சென்று இரத்த சோதனையும் பார்த்தாகி விட்டது.
நமது க.நா.2 திருட்டு முழி முழித்து கொண்டேயிருக்கிறார்.
அதன் பிறகு
வ.வி.க.: சார் 20ஆம் தேதி வந்துருங்க. காலைல 8 மணிக்கு வந்துருங்க. இங்கெருந்து சீப்புல (ஜீப்பில்) போகலாம்
க.நா.2 : சரி சார்
அதன் பிறகு க.நா.2 ஆரம்ப சுகாதார நிலையம் பக்கம் வரவேயில்லை. (அது தானே நமக்கு வேண்டும்). எந்த பிரச்சனையும் செய்யவில்லை. சில வாரங்கள் கழிந்த நிலையில் ஒரு நாள் பள்ளிசிறார் ஆய்வு திட்டத்திற்கு சென்று விட்டு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தேன். ஊரின் பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள தேநீர்கடையில் (அனைத்து ஊர்களிலும் ஆலமரம் இருக்காது. பல இடங்களில் பேரூந்து நிறுத்தமும் அதன் அருகில் உள்ள தேநீர்கடையும் தான் வேலையற்ற வீணர்களின் மூளையற்ற அரட்டைக்கு ஆட்படும் இடங்கள்) ஒரு பத்து பேரிடம் தன் வீர பிரதாபங்களை கூறிக்கொண்டிருந்தார். என் நல்ல நேரம் (நம் க.நா.2 வின் கெட்ட நேரம்), என்னுடன் வட்டார விரிவாக்க கல்வியாளரும் இருந்தார்.
வாகன ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த கூறிவிட்டு, அனைவரும் இறங்கி விட்டோம்.
நான் : சார் நல்லாயிருக்கீங்களா
க.நா.2 : நல்லாயிருக்கேன். வீட்ல கொஞ்சம் அவசர வேல இருக்கு. நாம அப்புறம் பாக்கலாம. (அது நாள் வரை இந்த கும்பலை கண்டு பொது சுகாதார துறை ஊழியர்கள் தான் ஓடுவது வழக்கம். இப்பொழுதோ எங்களை பார்த்து இவர் ஓடுகிறார்)
நான் : எங்களுக்கும் வேலை இருக்கு. அது சரி. நீங்க இந்த மாசம் ஏரல்ல குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சுக்கிறதா சொன்னீங்கல.
க.நா.2 : ….. (கூடியிருப்பவர்கள் அவரை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்)
வ.வி.க : (கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல்) அவர் மட்டும் கிடையாது. இங்க யார் யார் வீட்ல எல்லாம் பொம்பளங்க “வீக்கா” இருக்காங்களோ அவங்க விட்ட எல்லாம் ஆம்பளங்க ஆபரேசன் பண்ணுரதா தலவர் சொன்னாருல. அதான் நாங்கலே சீப்புல கூட்டிக்கிட்டு போகலாமுன்னு நினைச்சோம். அன்னிக்கு சாங்காலமே வந்துவுட்டுருவோம்
க.நா.2 உடன் இருந்தவர்களில் ஒருவர் : ஊருல எல்லாருமா சார்.
நான் : எல்லாருமுன்னு இல்ல. ஆனா நீங்களாம் ஆஸ்பத்திரி மேல ரொம்ப அக்கர உள்ளவங்க. ஆஸ்பத்திரில இருக்கிறவங்க. நாங்க உங்களுக்கு ஏதாது பண்ணனும்ல. அதான் ஏரல்ல நடக்கிற முகாமுக்கு நாங்கே உங்கள எல்லாம் சீப்புல கூட்டிகிட்டு போகலாமுன்னு
கூடியிருந்தவர்களின் பார்வை சந்தேகத்திலிருந்து கேள்வியாகிறது.
- ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ???
- இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??
- கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??
போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்
ஆண்மை என்று குறிக்கப்படுவது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதை வைத்து. இதை ஆங்கிலத்தில் பொட்டன்சி (Potency) என்று கூறுவார்கள்
எனவே ஒருவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா இல்லையா என்பதை வைத்து, அவர்
- ஆண்மை உள்ளவரா – பொட்டண்ட் Potent
- ஆண்மையற்றவரா – இம்பொட்டண்ட் Impotent
என்று கூறலாம்
அதே போல் ஒருவரால் தந்தையாக முடியுமா இல்லையா என்பதை வைத்து
- பெர்டிலிட்டி – Fertilily
- மலட்டுத்தன்மை ஸ்டெரிலிட்டி – Sterilily
என்று பிரிக்கலாம்
இது இரண்டும் தனி தனி அம்சங்கள்
உதாரணமாக
கருப்பு, வெள்ளை என்று இரு நிறங்களையும்
பேனா, பென்சில் என்று இரு பொருட்களையும் வைத்துக்கொண்டால்
- கருப்பு பேனா
- வெள்ளை பேனா
- கருப்பு பென்சில்
- வெள்ளை பென்சில்
என்று நான்கு சாத்தியக்கூறுகள் உள்ளதை போல்
ஆண்மை, ஆண்மையின்மை, மலடு, மலடில்லை என்று பார்த்தால்
- ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம். Potent and Fertile
- ஆண்மை குறைவு, தந்தையாகலாம். Impotent and Fertile
- ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது. Potent, but sterile
- ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது. Impotent, Sterile
என்று நான்கு பிரிவுகள் வரும்
ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம்
- இதில் தான் பெரும்பாண்மையானவர்கள் உள்ளார்கள் என்பதால் இது குறித்து பெரிதாக விளக்கம் தேவை யில்லை என்று நினைக்கிறேன்
ஆண்மை குறைவு, தந்தையாகலாம்
- இதிலும் பலர் உள்ளனர். இந்த ஆண்மைக்குறைவு என்பது பெரிய தலைப்பு என்பதால் (வாசகர்களின் ஆதரவு இருந்தால்) சில இடுகைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
- இந்த பகுப்பில் இருப்பவர்களாம் தாம்பத்திய உறவில் ஈட்பட முடியாமை, சிரமம் ஆகியவை இருக்கும்
- இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்தால் போதும்
- வயகரா, சிட்டு குருவி லேகியம், அல்வா !!! ஆகியவை இங்கு உதவும்
- இதில் பெரும்பாண்மையான நோய்களுக்கு பூரண குணமடையும் சிகிச்சை உள்ளது.
ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது
- இது தான் மிக முக்கியமான் விஷயம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற விபரமே நாட்டில் பலருக்கும் தெரியாது.
- இவர்கள் தங்களிடம் குறை உள்ளது என்று தெரியாமல் இரண்டு, மூன்று என்று திருமணம் செய்து கொண்டே போவர்கள்
- இந்த நிலைக்கு பல காரணங்கள்
- இதில் சில நோய்களுக்கு சிகிச்சை உண்டு. சில நோயக்ளுக்கு கிடையாது
- முக்கிய குறிப்பு : கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் இந்த வகையில் சேருவார்கள். கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை குறையாது
ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது
- இது பல காரணங்களினால் வரும் .
- அனைத்தும் மருத்துவ பெயர்கள் என்பதால் உங்களை குழப்ப விரும்பவில்லை
ஆண்மை, பெண்மை குறித்து நான் எழுதியவை
- ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்…… பகுதி 1
- ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண்
- ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்…… பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்
அடுத்து சில இடுகைகள் சினிமா பக்கம் சென்று விட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மீண்டும் பின்னொரு சமயம் வரலாம் என்று நினைக்கிறேன்