தாராளமயம் Liberalization உலகமயம் Globalization தனியார்மயம் Privatization நவீனமயம் Modernization

தாராளமயம், உலகமயம், தனியார்மயம், நவீனமயம் ஆகிய சொற்கள் அடிக்கடி குழப்பப்படுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றாலும் கூட ஒரே பொருள் தருபவை அல்ல

தாராளமயம் (Liberalisation Liberalizastion) என்றால் அரசின் சட்ட திட்டங்களை தளர்த்துவது.  தாராளமயமாக்கத்தின் ஆதரவாளர்கள் என்ன சொல்வார்கள் என்றால் சில பல பழங்கால சட்டங்கள் இன்றைக்கு பொருந்தாது. எனவே அவற்றை நீக்கினால் அனைவருக்கும் நலம். அதானால் நீக்க சொல்கிறோம் என்பார்கள். அதே நேரம் இதை எதிர்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் இந்த சட்டங்கள் நம்மை – அதாவது இந்திய நிறுவனங்களை / சிறு தொழில்களை – காக்க உருவாக்கப்பட்டவை. எனவே இவற்றை நீக்கினால் சிறு தொழில்கள் அழிந்து விடும் என்பார்கள். இரண்டுமே பொய் அல்ல. ஆனால் உண்மை இரண்டிற்கும் நடுவில் உள்ளது. தாராளமயத்திற்கு எதிரான நிலைக்கு பேர் வன்விதிநடைமுறை அல்லது லைசன்ஸ் ராஜ் ! (License Raj)

liberalization privatization globalization

உலகமயம் (Globalisation Globalization) என்றால் ஒரு நாட்டு நிறுவனம் அடுத்த நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி. உதாரணமாக இன்பொசிஸ் அமெரிக்காவின் மென்பொருள் விற்கலாம். ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் விற்கலாம். இதற்கு எதிரான நிலை – அதாவது இந்தியாவில் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே விற்கப்பட வேண்டும், நாமும் இறக்குமதியும் செய்யக்கூடாது ஏற்றுமதியும் செய்யக்கூடாது என்ற நிலைக்கு பெயர் தற்சார்பு பொருளாதாரம் (Tribalisation Tribalization).

தனியார்மயம் (Privatisation Privatization) என்றால் அரசு செய்த ஒரு வியாபாரம் அல்லது சேவை தனியார் வசம் வருவது (மிக மிக சுருக்கமான விளக்கம் இது. முற்றிலும் சரியான விளக்கமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) : உதாரணம் அரசு மட்டுமே அளித்து வந்த விமான சேவை தனியாரும் அளிக்க ஆரம்பித்தது . . . இதற்கு நேர் எதிர் அரசுடமை (Nationalisation Nationalization). தனியாரிடம் இருந்த வங்கி, பேரூந்து ஆகியவற்றை அரசு வாங்கியது அரசுடைமை (தற்போதைய உதாரணம் – டாஸ்மாக் !!)



நவீனமயம் (Modernisation Modernization) என்பது ஒரு செயலை செய்யும் நுட்பங்களை நவீனப்படுத்துவது. அதாவது ஓலைச்சுவடியில் எழுத்தாணி வைத்து எழுதுவதற்கு பதில் காகிதத்தில் பேனா வைத்து எழுதுவது நவீனமயம். அதை விட தட்டச்சு செய்வது நவீனமயம். அதை விட கணினியில் உள்ளீடுவது நவீனமயம். இன்று அலைபேசியில் உள்ளீடுவது நவீனமயத்தின் அடுத்தக்கட்டம். எழுத்தை தொடாமல் பேசுவதை கூகிள் எழுத்தாக மாற்றுவது சமீபத்திய முன்னேற்றம். கடிதம் – தந்தி – பேஜர் – அலைபேசி என்றும் நீங்கள் நவீனமயத்தை புரிந்து கொள்ளலாம். நவீனமயத்திற்கு எதிர்நிலையில் இருப்பது மரபு வழி (Traditional / Natural / Organic). மாருதி சீருந்தில் செல்பவர் டெஸ்லா மின்சீருந்தில் செல்வது நவீனமயம் என்றால், மாருதி சீருந்தை விட்டு விட்டு மீண்டும் மாட்டு வண்டியில் செல்வது மரபுவழி.

நான்கும் ஒன்றல்ல. ஆனால் சில நேரங்களில் ஒரு நிறுவனம் துவங்க இவை நான்கும் தேவை. சில நேரங்களில் மூன்று மட்டும் போதும். சில இடங்களில் இரண்டு மட்டும் போதும். சில நேரங்களில் ஒன்று மட்டும் போதும். இதில் முதல் மூன்றையும் சேர்த்து LPG – Liberalisation, Privatisation, Globalisation என்று மொத்தமாக கூறுவார்கள்.



இந்த நான்கு விஷயங்களையும் குறித்து நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது முக்கியம். காரணம் 1990 முதல் 2020 வரையிலான மூன்று தசாப்தங்களில் ஒவ்வொரு துறையிலும் இந்த நான்கு விஷயங்களுமே நடந்துள்ளன. உதாரணமாக நவீன மயத்தால் நடந்த நல்ல விஷயங்களை வைத்து (உதாரணமாக தொலைபேசி இணைப்பு ஒரே நாளில் கிடைப்பது) ஒரு கும்பல் உங்களை தனியார்மயத்தால் தான் இவை நடந்தது என்று ஏமாற்றப்பார்ப்பார்கள். அதே போல் தனியார்மயத்தால் நடந்த கெட்ட விஷயங்களை காட்டி (உதாரணமாக மருத்துவமனை கட்டனங்கள் உயர்ந்தது) நவீனமயத்தால் தான் இவை நடந்தது என்று சில உங்களை ஏமாற்றி உங்களை மரபு வழி நல்லினவிருத்தியியலுக்கு கொண்டு செல்ல முயல்வார்கள். மரபு வழி நல்லினவிருத்தியியல் குறித்து அறிய இந்த கதையை http://www.pgmed.org/oe படிக்கவும்