* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் – ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது.

காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு “அவருக்கு ஊசி போடுங்கள்”, “நம்ம அண்ணனுக்கு க்ளுகோஸ் ஏற்றுங்கள்” என்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் செட்டிலாகி விடுவது. மதியம் அங்குள்ள பணியாளர் விடுதியில் ஆடுபுலிஆட்டம் ஆடுவது (ஏனோ சீட்டு, ரம்மி அந்த குழுவில் அவ்வளவு பிரபலம் இல்லை) என்று கச்சேரியை ஆரம்பித்து விடுவார்கள்

அதன் பின் அடுத்த கோஷ்டி ஆரம்ப சுகாதார நிலையம் பற்றியும் மருத்துவ அலுவலர் பற்றியும் புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். சுகாதார பணிகள் துனை இயக்குனரில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வரை அனுப்பபடும் புகார்களின் நகல்கள், சுகாதார செயலர், சுகாதார அமைச்சர், தலைமைச்செயலர், முதலமைச்சர், குடியரசுத்தலைவர் வரை செல்லும். (அவருக்கு தமிழ் புரியும். அனுப்புடா !!) அப்பொது அப்துல் கலாம் குடியரசுத்தலைவர்.. ஒரு தமிழர் குடியரசுத்தலைவரானால் என்னென்ன புகார் மனு எல்லாம் பெற வேண்டியுள்ளது பாருங்கள்.

உடன் அந்த மருத்துவர் மீது விசாரணை வைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பெறும்பாலும் மருத்துவ இளங்கலை (MBBS) படித்து முடித்த உடன் பணியில் சேர்ந்திருப்பவர்கள். புகாரை பார்த்தவுடன் வீட்டில் புலம்பி அடுத்த நிலையத்திற்கு மாற்றலாகி சென்று விடுவார்கள். அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1500 இடங்கள் காலியாக இருந்தன. (இன்று 100 இடங்கள் கூட காலியில்லை) மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யாமல் அங்கிருந்து ஓடுவதற்கு முக்கிய காரணம் அங்குள்ள நிர்வாக பணி, கடைநிலைய ஊழியர்களின் பிரச்சனை, மற்றும் இது போல் சில இடங்களில் ஊரில் உள்ள வெட்டிபயல்கள் கிளப்பும் பிரச்சனைதான்.



அந்த மருத்துவர் மாற்றலாகி சென்ற உடன் அடுத்த மருத்துவர் வருவார். அவர் முதல் குழு மேல் எச்சரிக்கையுடன் வருவதால் அந்த குழுவை தள்ளி வைப்பார். இது தான் நேரம் என்று அடுத்த குழு உள்ளே புகுந்து விடும். பிறகென்ன, ”பழைய குருடி கதவை திறடி” கதைதான். இந்த குழு அதே போல் இம்சை அளிக்கும். இந்த முறை முதல் குழு புகார் அளிக்கும். (இந்த புகாரும் குடியரசு தலைவர் மாளிகை வரை செல்லும்) அந்த மருத்துவரும் ஓடி விடுவார்.

அது சரி, மருத்துவர் ஏன் இப்படி வெட்டி பயல்களுடன் பேச வேண்டும். மருத்துவமனையில் அமர்ந்து வருபவர்களை சோதித்து ஊசி, மாத்திரை எழுதினால் போதாதா என்ற கேள்வி உங்களுக்கு வருவது நியாயம் தான்.
அரசு மருத்துவமனைகள் (மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை), போன்ற மருத்துவமனைகளுக்கு இரு பணிகள் தான் – புறநோயாளி சிகிச்சை, உள்நோயாளி சிகிச்சை (இதில் அறுவை சிகிச்சை அடக்கம்). மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்கள் கூடுதல் பணியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும். மற்றும் நீதிமன்றப்பணி, முகாம்கள், சிறப்பு பணிகள் என்று இருந்தாலும் அவை எல்லாம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் பணிகள் தான்

ஆனால் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணிகள் பல. அதில் உள்ள பிற பணிகளுடன் ஒப்பிடுகையில் புறநோயாளி சிகிச்சை என்பது முக்கியத்துவம் குறைந்த பணிதான். (அதாவது பிற பணிகள் மிக மிக முக்கியம் என்ற அர்த்தத்தில்) குடும்ப நலம், தடுப்பூசி, சுகாதாரம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு, ஏய்ட்ஸ் தடுப்பு, பல்ஸ் போலியோ, பள்ளி சிறார் நலம், ஆய்வுப்பணி, திருவிழா நேரங்களில் தொற்று நோய் பரவாமல் தடுப்பது என்று பல பணிகள் உண்டு – இதை செய்வதற்கு பல பயிற்சிகள் தேவை. இதனால் தான், எந்த பயிற்சியும் பெறாத மருத்துவர்களை வெறும் நான்கு மாதம் வரை 8000 ஊதியத்தில் நியமிக்கும் திட்டத்தை கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் கடுமையாக எதிர்த்தார்கள்.

எனவே இப்படி பலதரப்பட்ட பணிகளுக்காக ஊர் மக்களுடன் நெருங்கி பணிபுரிய வேண்டும். களத்தில் மருத்துவர் இல்லையென்றால் (புறநோயாளிகளுக்கு ஊசி போடுவதை தவிர) ஒரு வேலையும் நடக்காது. ஆனால் அப்படி மருத்துவர் ஊர் மக்களுடன் பழகுவது கவனமாக செய்ய வேண்டும். அவர் ஒரு சாரார் உடன் பழகுகிறார் என்று அடுத்த சாரார் நினைத்தால் பிரச்சனை தான்.

அதுவும் ஏற்கனவே குழுமனப்பாண்மையால் இரண்டு பட்டிருக்கும் ஊரில் இது போல் பிரச்சனை எளிதில் பெரிதாகி விடும். உதாரணமாக காச நோய்க்கு மருந்து சாப்பிடும் நோயாளி மருந்து ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று சோதிக்க மருத்துவர் கள ஆய்வு சென்றால் அங்குள்ள ஏதேனும் இரண்டு நோயாளிகளை பார்த்தால் போதும் என்று காச நோய்திட்ட குறிப்புகள்/ வழிமுறைகள் சொன்னாலும், ஒரே குழுவை சேர்ந்த இரு நோயாளிகளை பார்த்து விட்டு அடுத்த குழுவை சேர்ந்தவர்களை பார்க்காவிட்டால் பிரச்சனைதான். மருத்துவரை ஒரு குழுவிற்கு ஆதரவளிப்பவராக கருதி அடுத்த குழு அவரை தொந்தரவு படுத்த ஆரம்பிக்கும்.

சரி ஒவ்வொரு குழுவில் ஒருவரை பார்த்து விட்டு வரலாம் என்றால், முதல் வீட்டின் ‘கலர்’ குடித்திருந்தால், அடுத்த வீட்டிலும் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று நாகரிகமாக மறுத்தால் பிரச்சனை 🙂 🙂

இப்படியாக எப்படியோ ஒரு மருத்துவர் ஒரு குழுவிற்கு நெருக்கமானவர் என்று பெயர் வந்து விட்டால் (இப்படி பெயர் வருவது என்பது அவர்களின் திட்டமிட்ட செயலாக இருக்காது – இதில் பெரிய கொடுமை என்னவென்றால் பல இடங்களில் இரண்டு குழுவுமே ஒரே ஜாதியாகத்தான் இருக்கும் – பல மருத்துவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாது) அதன் பிறகு தலைவலி தான்.

சில இடங்களில் இந்த பிரச்சனை குறைவு. நான் சொன்ன ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த பிரச்சனை அதிகம்.இப்படி தொடர்ந்து மருத்துவர்கள் தொல்லைக்கு உள்ளாவதால், அங்கு யாரும் பணி புரிவதில்லை. தமிழகத்தில் கடந்த வருடங்களில் சுமார் 4000 மருத்துவர் பணியிடங்கள் வரை காலியாக இருந்ததால், (ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே 1500 காலியிடங்கள் இருந்தன) மாற்றல் பெறுவது சிரமமே இல்லை. (இன்று – 18/10/2008 நிலவரப்படி – ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 100 காலியிடங்களும், அரசு மருத்துவமனைகளில் சுமார் 30 காலியிடங்களும், மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 2000 காலியிடங்களும் உள்ளன. அதில் அடுத்த மாதம் 200 + 100 காலியிடங்கள் அரசு தேர்வாணைய காத்திருப்பு பட்டியலிலிருந்து நிரப்பப்பட உள்ளன.)

எனவே 3 மருத்துவர் பணி புரிய வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருவருமே கிடையாது. அந்த மாவட்டத்தின் பிற சுகாதார நிலையங்களிலிருந்து மாற்றுப்பணி மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு் பணி நடந்து கொண்டிருந்தது.மாற்றுப்பணி மருத்துவர்களும் இப்படி இரண்டு குழுவில் ஏதோ ஒரு குழுவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைய விட்டு விட்டால் (அடுத்த குழுவால்) தலைவலி ஆரம்பித்து விடும்.
இப்படி யான ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது

தொடர்ந்து வாசிக்க…